சியா விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடல் எடையை குறைப்பது முதல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது வரை அனைத்து வேலைகளையும் சியா விதைகள் செய்து வருகின்றன.
பூமியில் விளையக்கூடிய விதைகளில், சியா விதைகளில் தான் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஒமேகா 3 ,கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரோட்டீன் ,கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை அதிகமாக உள்ளன.இத்தகைய சியா விதைகளை தொடர்ந்து உட்கொள்வதனால் அற்புதமான நன்மைகள் ஏற்படும்.
சியா விதைகளில் கலோரிகள் குறைவாக இருக்கும். மற்றும் குளூட்டன் இல்லாதவை. பொதுவாக சியா விதைகளை சாலட் மற்றும் ஸ்மூதியில் சேர்த்து ,ஊட்டச்சத்து அடர்த்தியான உணவின் பலன்களை நாம் பெறலாம். சியாவில் 6 சதவீதம் தண்ணீர் ,46 சதவீதம் கார்போஹைட்ரேட் ,34 சதவீதம் கொழுப்பு, 19 சதவீதம் புரதம் உள்ளது. 28 கிராம் விதைகளில் 138 கலோரிகள் உள்ளன .100 கிராம் சியா விதையில் 486 கலோரிகளும், 16.5 கிராம் புரதம், 30.7 கிராம் கொழுப்பு அடங்கியுள்ளன.
சியா விதை என்பது சால்வியா என்னும் தாவரத்தின் கருப்பு நிற விதையாகும். இவை கருப்பு நிறத்தோடு சாம்பல் பழுப்பு வெள்ளை என்ற நிறங்களையும் கலவையாக கொண்டிருக்கும் இவை சற்று பெரியவையாக காணப்படும். ஓவல் வடிவத்தில் இருக்கும் .
சப்ஜா விதைகள், சியா விதைகள் பார்ப்பதற்கு ஒன்று போலிருக்கும். சப்ஜா விதைகள் கருப்பு நிறத்தில் சிறியதாகவும் ,வட்டமாகவும் தோற்றமளிக்கம் . சப்ஜா விதைகளும் சியா விதைகள் போன்று சத்தானவை.ஆரோக்கியமானவை. ஆனால் சியா விதைகள் சாப்பிடுவது நன்மை பயக்கும் என்பதற்கு சான்றுகள் அதிகம் உள்ளன.
இது, புதினா குடும்பத்தைச் சேர்ந்தது. சியா விதைகளை பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஒரு ஸ்பூன் சியா விதைகளை சாப்பிட்டு வந்தால், அன்றைய நாள் முழுவதும் உடலுக்கு நல்ல ஆற்றல் தரும். இந்த சியா விதைகளை முழு ஊட்டச்சத்து நிறைந்த விதை எனலாம்.
இவை உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை காக்க உதவுகின்றன. உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்றன.
28 கிராம் விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
நார்ச்சத்து 11 கிராம், புரதம் 4 கிராம், கொழுப்புச்சத்து 9 கிராம், கால்சியம் 18% ,மாங்கனீசு 30 சதவீதம், பாஸ்பரஸ் 27% அடங்கி உள்ளது. இதை தவிர 22 வகையான அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இதைத்தவிர துத்தநாகம் ,நியாசின், பொட்டாசியம், தயாமின் மற்றும் வைட்டமின் b2 என்ற ஊட்டச் சத்துக்களும் நிறைந்து உள்ளது.
உடல் எடை குறைய
சியா விதைகள் கலோரிகள் மிகவும் குறைவு. ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தவை. சியா விதைகளில் உள்ள ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதய பாதுகாப்பு
சியா விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கெட்ட கொழுப்புக்களை கரைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கின்றன. மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் மாரடைப்பு வராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பற்கள் பாதுகாப்பு
சியா விதைகளில் கால்சியம், பாஸ்பரஸ் ,வைட்டமின் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதனால் ஒரு ஸ்பூன் சியா விதைகளை சாப்பிட்டு வர பற்கள் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் .இதிலுள்ள துத்தநாகம் பற்களில் படிந்திருக்கும் கறைகளை அகற்றி, பற்களை பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும். அதே போல் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்த்துப் போராடும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
சியா விதைகளை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து பிறகு சமைத்தும் சாப்பிடலாம் .அல்லது வறுத்து விழுது போல் அரைத்து சாப்பிடலாம் . இன்சுலின் சுரப்பை சீராக்கி, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் தினமும் சியா விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
மேலும், உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதினால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் .உடலில் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி, கை கால் வலி போன்றவை குணமாகும். உடல் எடை குறையும். செரிமானத் திறன் அதிகரிக்கும்.
சியா விதைகள் டிடாக்ஸ் பானம்.
தேவையானவை:
சியா விதைகள் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி, புதினா இலைகளை 5, தேன் ஒரு தேக்கரண்டி( இனிப்புச்சுவை தேவையெனில்), தண்ணீர் ஒரு கப்.
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் சியா விதைகளை எடுத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும் அத்துடன் புதினா இலைகள் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். அனைத்து பொருட்களும் சரியாக கலந்துள்ள நிலையில் அது ஜெல் போன்று ஒரு நிலையில் இருக்கும்.
இப்பொழுது இது குடிப்பதற்கு தயார் நிலையில் உள்ளது.
பயன்கள்:
எலுமிச்சையில் உள்ள அதிகப்படியான சி சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது .எலுமிச்சையில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.
சியா விதையில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதனால் செரிமானத்தை துரிதப்படுத்தி குடலியக்கத்தை மேம்படுத்த உதவுகிறது .
மேலும் ,சியா விதைகள் உடலில் இன்சுலின் சுரப்பை சீராக்கி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
சியா விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் ஒருவகையான ஆல்பா -லினோலெனிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. இது கார்டியோ-வாஸ்குலர் மண்டலம் சிறந்து இயங்க உதவுகிறது .
சியா விதைகளில் உள்ள கால்சியம், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக இது விளங்குகிறது.
பக்க விளைவுகள்
சியா விதைகளை கொஞ்சம் கொஞ்சமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி சியா விதை கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் குடிப்பது, ஒரு நாளைக்கு பல முறை குடிப்பது ஒரு ஒழுங்கற்ற உணவு முறையை தூண்டிவிடும் அபாயம் ஆகும். எனவே , உடலில் உணவுக் கோளாறு ஏற்படுத்தி உடலில் ஊட்டச்சத்துக்களை இழக்க வழிவகுக்கும் .எனவே சியா விதைகளை கொஞ்சம் கொஞ்சமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.