5G என்றால் என்ன என்று மிகவும் எளிமையாக உங்களுக்கு நான் புரிய வைக்கிறேன். பிறகு அது ஆபத்தான விஷயமா இல்லை நன்மை தரும் விஷயமா என்று விளக்குகிறேன்.
5G என்றால் ஐந்தாவது தலைமுறை தொலைத் தொடர்பு என்று பொருள். ஒயர் இல்லாமல் ரேடியோ அலைகள் மூலம் தொடர்பு கொள்வது தான் இந்த 1G, 2G, 3G, 4G தொழில்நுட்பங்கள்.
நான் எல்லா தலைமுறை அறிவியல் வளர்ச்சியும் பார்த்திருக்கிறேன். சிறுவயதில் ரேடியோ மட்டும் கேட்ட நான், தமிழ்நாட்டிற்கு தொலைக்காட்சி வந்ததை பார்த்திருக்கிறேன். அவ்வளவு ஏன், நம் ஊரில் கேஸ் அடுப்பு, பிரஷர் குக்கர் அறிமுகப்படுத்தப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.
குக்கர் வெடித்து விடுமா? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இப்போது சிரிப்பு வந்தாலும், அன்றைய காலகட்டத்தில் அது நியாயமான கேள்வி!
5G, 5ஜி அலைவரிசை என்ற விஞ்ஞானம் இப்பொழுது பரவலாக பேசப்படுகிறது. நல்லவேளை அறிவியல் பூர்வமாக 5ஜி அலைக்கற்றை பற்றி நாம் விவாதிக்கிறோம். இதற்கு முன்பு 4G, 3G போன்றவை வந்தாலும், தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஒன்று 2G தான்!
ராஜா மற்றும் கனிமொழி தயவில் 2ஜிக்கு கிடைத்த விளம்பரம், நம்ம ஊரில் வேறு எந்த ஜிக்கும் கிடைக்கவில்லை. அரசியலை விட்டு விட்டு அறிவியலை மட்டும் பார்த்தோம் என்றால், 5ஜி தொழில்நுட்பம் ஒரு தொலைத் தொடர்பு பரிணாம வளர்ச்சி. இதற்கு முன்பு இருந்தவை 0G, 1G, 2G, 3G, 4G தொழில்நுட்பங்கள். இப்பொழுது இருப்பது, 4G LTE, Vo LTE!
Vo LTE என்றால் Voice over Long term evolution தொழில்நுட்பம் என்று பாடம் எடுக்க ஆரம்பித்தால், நீங்கள் இதை மூடி வைத்துவிட்டு விக்ரம் 2 கமலஹாசன் பற்றி அல்லது நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணத்துக்குப் பிறகு எங்கே ஹனிமூன் சென்றார்கள்? என்று சீரியஸ் ஆக படிக்க ஆரம்பித்து விடுவீர்கள். எனவே Technical Terms குறைத்துக் கொண்டு, இயன்ற அளவு எளிமையாக உங்களுக்கு 5G பற்றி விளக்குகிறேன்.
நான் சிறுவனாக இருந்த பொழுது, சென்னையிலிருந்து மதுரை செல்ல வேண்டும் என்றால் மீட்டர் கேஜ் ரயில் வண்டி மட்டும் தான் இருக்கும். முதன் முதலில் வைகை எக்ஸ்பிரஸ் சென்னைக்கும் மதுரைக்கும் இடையே அறிமுகப்படுத்தப்பட்ட போது, அது தமிழ்நாட்டில் மிகப்பெரிய செய்தியாக மாறியது.
1980ஆம் வருடம் வைகை எக்ஸ்பிரஸ் தான் இந்தியாவிலேயே வேகமான ரயில் என்று நான் சிறுவனாக இருக்கும்போது நினைத்தேன். ஆனால் விஷயம் தெரிந்தவர் ஒருவர் சொன்னார், மும்பைக்கும் புது டெல்லிக்கும் இடையே பறக்கும் ராஜதானி எக்ஸ்பிரஸ் தான் இந்தியாவிலேயே வேகமான ரயில் என்று எனக்கு எடுத்துச் சொன்னார்.
அது எப்படி ராஜதாணி எக்ஸ்பிரஸ், நம் தமிழ்நாட்டின் வைகை எக்ஸ்பிரஸ் வண்டியை விட வேகமாக செல்லலாம்?என்று அப்பொழுது தமிழ்நாட்டின் சார்பாக நான் கோபப்பட்டேன். தமிழ்நாட்டிற்கு வேகமான ரயில் கிடையாதா?? என்ன அக்கிரமம் !! என்று அன்று சின்ன பையன் என் கோபத்தில் நியாயம் இல்லை.
காரணம், அறிவியல்!!
வைகை எக்ஸ்பிரஸ் அப்பொழுது, மீட்டர் கேஜ் என்று குறுகிய பாதையில் சென்றது. ஆனால் மும்பைக்கும் டெல்லிக்கும் இடையில் அப்போது 80ஆம் வருடம் Broad gauge அகல பாதையில் ரயில் சென்றதால், அது இரண்டு மடங்கு வேகத்தில் சென்றது.
நாம் உபயோகிக்கும் டேட்டா Data (audio video) போன்றவை ஒரு ரயில் என்றால், அது பயணம் செய்யும் தண்டவாளம் தான் 4ஜி 5ஜி போன்ற அலைகற்றை!
இப்பொழுது உங்களுக்கு எளிமைப்படுத்துகிறேன்.
1G என்பது ஒரு குதிரை வண்டியில் ஐந்து பேர் மதுரையில் இருந்து மேலூர் வரை பயணம் செய்தது.
2G என்பது ஒரு பாண்டியன் போக்குவரத்து பஸ்சில் 50 பேர் மதுரையில் இருந்து திருச்சி வரை பயணம் செய்தது.
3G என்பது ஒரு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 500 பேர் மதுரையில் இருந்து சென்னை வரை எட்டு மணி நேரத்தில் பயணம் செய்தது.
4G என்பது அகலப்பாதை ரயிலில் 1000 மனிதர்கள் வேகமாக 5 மணி நேரத்தில் அதே தூரத்தை பயணம் செய்வது.
5G என்பது புல்லட் ட்ரெயின் மூலம் Magnetic Track மேலே மணிக்கு 500 km வேகத்தில், அலுங்காமல் குலுங்காமல் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தை போல் ஒரு மணி நேரத்தில் 5000 மனிதர்கள் பயணம் செய்வது!
இதற்கு அடுத்து 6G என்பது மதுரையில் இருந்து ஜெட் விமானத்தில் சிங்கப்பூர் செல்வது. இது இன்னும் வரவில்லை.
அவ்வளவு ஏன், 5G இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நாடு, தென்கொரியா மட்டும் தான்.
நான் ஏற்கனவே ஒரு பதிலில் சாம்சங் நிறுவனம் பற்றி எழுதும்பொழுது, தென்கொரியாவின் வளர்ச்சி பற்றி எழுதி இருந்தேன். தென்கொரியாவின் வளர்ச்சிக்கு காரணம் கல்விக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம்.
5G தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு டிசம்பர் 2018. கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு பொருளாதாரம் பாதிப்படையாத ஒரே நாடு தென்கொரியாதான்! காரணம் 5g தொழில்நுட்பம் அங்கே முறையாக செயல்படுத்தப்பட்டது தான்!!
ஒயர்கள் இல்லாமல் ரேடியோ அலைகள் மூலம் 1980 களில் வெறும் பேச மட்டும் செய்தது Analog மூலம் தொலைத் தொடர்பு கொண்டதுதான் முதல் தலைமுறை அதாவது 1G!
பேசுவது மற்றும் Text மெசேஜ் செய்ய டிஜிட்டல் முறையை பயன்படுத்திய தொலைத்தொடர்புதான் நம்ம ராசா புகழ் 2ஜி!
பேசுவது, (voice ), எழுத்து (Text Message) மற்றும் ஆடியோ வீடியோ மல்டிமீடியா இரண்டு ஃபோன்களுக்கு இடையே அனுப்புவது தான் 3ஜி தொழில்நுட்பம் இது 2000 ஆம் ஆண்டு பிரபலமானது.
இப்பொழுது பயன்பாட்டில் இருக்கும் தொழில்நுட்பம்தான் 4ஜி! முழு பெயர், 4G Vo LTE. இது இவ்வளவு நாள் எடுத்துக் கொண்டதன் காரணமாக, long term evolution என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.
அடுத்து வருவது தான் நமது கதாநாயகன் 5ஜி! இதை பெருமளவு உலகத்தில் அறிமுகப்படுத்திய கம்பெனி குவால் காம் , Qualcomm என்ற சீன தொலைத்தொடர்பு நிறுவனம்.
சரி எப்படி இந்த வேகம் அதிகம் ஆயிற்று? இந்த வேகத்திற்கு என்ன பயன்?
முதலில் நான் சொன்ன 3g 4g பயன்படுத்திய ரேடியோ அலைகள் குறைந்த Frequency மற்றும் அதன் அலையின் நீளம் wavelength கொஞ்சம் சிறியது.
ஆனால் 5g அலை வரிசை என்பது மில்லி மீட்டர் அலைகள் என்று அழைக்கப்படும் MM wave என்ற அலை வரிசையில் Broadband என்று அகலமான பாதையில் விரைய போகிறது.
இந்த அலை வரிசையை நீங்கள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மொத்த மின்காந்த அலைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மின்காந்த அலைகள் என்பது, ரேடியோ அலைகள் ஆரம்பித்து நாம் பார்க்கும் சூரிய ஒளி இன்ஃப்ரா ரெட் புற ஊதா கதிர்கள் எக்ஸ் ரே காமா கதிர்கள் என்று மிகவும் ஒரு பெரிய ராஜபாட்டை!
இதில் 5G பயன்படுத்துவது மைக்ரோ Wave அலைவரிசை.
கொஞ்சம் நிறுத்துங்கள்!! மைக்ரோ வேவ் அடுப்பு இயங்கும் அலைவரிசை என்பது ஒரு பொருளை சூடாக்கி வேகவைக்கும் சக்தி கொண்டது. அப்படி என்றால் 5g நம்மை சூடாக்கி ரேடியேஷன் மூலம் கொன்று விடாதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
மைக்ரோவேவ் மட்டுமல்ல, சூரிய ஒளி கூட ஒரு ஆளைக் கொல்லும். ஒரு லென்ஸ் வைத்து சிறுவயதில் நாம் சூரிய ஒளியை குவித்து ஒரு பஞ்சை கொளுத்துவோமே நினைவு உள்ளதா?
அதுபோல் குவிப்பது தான் மைக்ரோவேவ் அடுப்பு. ஒரு சதுர இன்ச் பரப்பளவில் எவ்வளவு சக்தி பாய்கிறது, என்பதை வைத்துத்தான் அது நமக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியும்.
தொலைத்தொடர்பு என்பது மகாசக்தி வாய்ந்த ஒரு விஷயம் இல்லை. சூரிய ஒளி பரவலாக மேலே படுவது போல், 5ஜி அலைவரிசை என்பது, 30 Ghz முதல் 300 Ghz இலக்கத்தில் பாய்வதால், அது பாதிப்பை ஏற்படுத்தாது.
இந்த அலை நம்மை கொன்றுவிடும் என்றால், ஏற்கனவே நாம் உபயோகித்த ரேடியோக்கள், ஸ்மார்ட் போன்கள்கள் நம்மை ஏற்கனவே கொன்று இருக்க வேண்டும். அதே ரேடியோ அலை தான்!
இன்னும் சொல்லப்போனால் பட்டையாக உள்ளதால், இந்த மில்லி மீட்டர் அலைகள் ஒரு சுவற்றைத் தாண்டி கூட ஊடுருவ முடியாது.
இதுதான் 5g தொழில்நுட்பத்திற்கு ஒரு பெரிய சவால். எளிதில் தடை படுவதால், பல இடங்களில் அங்கங்கே சிறிய செல்கள் வைத்து MIMO, massive மிமோ என்ற தொழில்நுட்பம் மூலம் எக்கச்சக்க செய்திகளை எடுத்துச் சொல்லும்! கட்டிடம் கட்டும் இடத்தில், பல பேர் தள்ளித்தள்ளி நின்று கொண்டு செங்கல்களை தூக்கிப்போட்டு பிடித்து வெகு தூரம் எடுத்துச் செல்வது போல், ஏகப்பட்ட ஆன்டனாக்கள் தாண்டி நமக்கு வந்து சேரும் இந்த 5g தொழில்நுட்பம்!
இவ்வளவு எக்கச்சக்க டேட்டா நமக்கு எதற்கு? இப்போது இருக்கும் 4ஜி போதாதா? இதுவே வேகமாக தானே உள்ளது!! என்று நீங்கள் கேட்பதும் என் காதில் விழுகிறது.
இது இரண்டு போன்கள் மட்டும் பேசிக்கொள்ளும் தொழில்நுட்பம் இல்லை. வருங்காலம் என்பது போன்கள் மட்டுமல்ல.
IOT என்று அழைக்கப்படும் Internet of Things என்று இரண்டு இயந்திரங்கள் இன்டர்நெட் மூலம் இணைப்பது தான் எல்லா வேலைகளையும் செய்ய உதவி செய்யும்.
அதாவது சென்னையில் இருந்தபடி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளியே நிற்கும் ஒரு டாக்ஸியில் உங்கள் காதலியை நீங்கள் ஏற்றலாம். அந்தக் கார், உங்கள் காதலியை தானாக ஏற்றி க்கொண்டு உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். அப்புறம் என்ன, கல்யாணம் தான்!!
அது மட்டும் அல்ல, நியூயார்க்கில் இருக்கும் ஒரு வயதான பெண்மணிக்கு, சென்னையில் இருக்கும் ஒரு டாக்டர் Robotic Surgery மூலம் மூட்டு வலியை வைத்தியம் செய்யலாம்.
இந்த அற்புதம் நிகழக் காரணம், Broadband மூலம் ஒரே நேரத்தில் பல சங்கதிகளை (Data tranmission ) கொண்டு செல்லும் அகலம் மட்டுமல்ல.
Latency என்று ஒரு சமாச்சாரம். இது மிக மிக முக்கியம். ஒரு பொருளை நாம் பார்த்து, Reaction செய்யும் வேகம், அதில் ஏற்படும் தொய்வு தான் இந்த லேட்டனசி என்று சொல்வார்கள்.
உதாரணமாக நீங்கள் கார் ஓட்டுகிறீர்கள். குறுக்கே ஒரு வயதானவர் திடீரென்று வந்து விடுகிறார். கண்ணிமைக்கும் நேரத்தில், நடக்கும் இதை நீங்கள் பார்த்துவிட்டு நல்ல வேளையாக உடனே பிரேக் அடிக்கிறீர்கள். நீங்கள் பிரேக் அடிக்கவில்லை என்றால் அங்கே ஒரு ஆக்சிடென்ட், விபத்து உயிரிழப்பு நடக்க வாய்ப்பு உண்டு.
இவை அனைத்தையும் உங்கள் மூளை செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் 1/4 வினாடிகள். உங்கள் கண்கள் அதைப் பார்த்து மூளை வேலை செய்து கால்கள் பிரேக் அடிக்க இந்த நேரம் தேவை. அதாவது பார்த்த செய்தி, மூளைக்குச் சென்று செயல்படுத்த நமக்கு குறைந்தபட்சம் கால் 1/4 வினாடியாவது தேவை.
ஆனால் 5G தொழில்நுட்பம் மூலம் தானாக ஓடும் ஒரு தானியங்கி கார், செய்திகள் சென்று வருவதற்கு, தொய்வு மிகவும் கம்மியாக இருக்கும். அதாவது, 1/1000 ஒரு மில்லி செகண்ட் வேகத்தில், பெரியவர் கார் குறுக்கே வருவதைப் பார்த்து, காரின் பிரேக்குகள் தானாக செயல்படுத்தப்பட்டு கார் நின்று விடும். கார் குறுக்கே வந்த வயதானவர் கண்டிப்பாக உயிர் பிழைப்பார். விபத்துக்கள் குறைப்பதற்கு இந்த Latency அதாவது தொய்வில்லாமல் வேகமாக ஒரு இயந்திரம் வேலை செய்ய 5G அத்யாவசியமாகிறது. டிரைவர் இல்லாத ஒரு தானியங்கி கார் வருங்காலத்தில் சரியாக செயல்பட இந்த 5ஜி தொழில்நுட்பம் அவசியமாகிறது.
மேலே சொன்ன டாக்டர், Surgery செய்யும் போது வேறு ஒரு இடத்தில் ரத்தம் பொத்துக்கொண்டு வந்தால், அவர் ஒரு பட்டனை அமுக்கினால் நியூயார்க்கில் உள்ள ஒரு ரோபோ தன் இயந்திர கரங்களால் உடனே அந்த ரத்தத்தை நிறுத்த வேண்டும்.
இப்பொழுது மனிதர்கள் வேலை செய்வதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு AI என்று அழைக்கப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வேலை செய்யும் போது, இந்த நொடிப்பொழுது தாமதம் கூட அதன் செயல்பாட்டை தடுத்துவிடும்.
AI அதாவது செயற்கை நுண்ணறிவு நாளை ரோபோக்கள் உங்கள் வேலைகளை தொய்வில்லாமல் நொடிப்பொழுதில் செய்ய வேண்டும் என்றால் connection line இல் லேட்டனசி அதாவது தொய்வு என்பது மிக மிக கம்மியாக இருக்க வேண்டும். அதை சாதிப்பது தான் 5ஜி தொழில்நுட்பம்.
இது போன்று பல பல சாகசங்களை நீங்கள் 5ஜி தொழில்நுட்பம் மூலம் சாதிக்கலாம்.
இது உடல் நிலைக்கு அந்த அளவுக்கு தீங்கானது அல்ல என்று இதுவரை படித்த உங்களுக்கு புரிந்திருக்கும்.
மனித உடலுக்கு தீங்கு செய்யும் விஷயங்களை, கேன்சர் உண்டாக்கும் பொருட்களை உலக சுகாதார நிறுவனம் WHO வகைப்படுத்தியுள்ளது.
இதற்கு IARC Monograph list of carcinogens என்று ஒரு பட்டியல் உள்ளது. அதாவது நாம் உபயோகப்படுத்தும் பொருளை கேன்சர் உண்டாக்கக் கூடியதுதானா என்று தரவரிசைப்படுத்துவார்கள்!
இதை group 1, 2, 2A 2B,3 என்று சொல்வார்கள். கண்டிப்பாக கேன்சர் வராது என்றால் அது 3 என்று வகைப்படுத்தப்படும்.
வரும் ஆனா வராது என்றால் 2A. உதாரணமாக சோற்றுக்கற்றாழை 2A. Asbestos என்ற பொருள் கண்டிப்பாக கேன்சர் உண்டாக்கும். அது 1 என்று வரிசைப்படுத்தி உள்ளது. ஆனால் 5ஜி கதிர இயக்கம் 2B, அதாவது மோசமான பட்டியலில் இல்லை!!
எனவே இது உடல் நலத்திற்கு ஆபத்தானது இல்லை, என்று நாம் உறுதியாக சொல்ல முடியும்.
ஆனால் வேறு ஒரு தீங்கு வர வாய்ப்பு உள்ளது.
நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் ஒரு மானிட்டர் ஒரு சிபியு CPU ஒரு சிஸ்டம் இருக்கும். 5G பயன்பாட்டுக்கு வந்து விட்டால், இனி கம்ப்யூட்டர் தேவையில்லை. வெறும் மானிட்டர் போதும்.
Cloud Computing என்ற தொழில்நுட்பத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு ரிமோட் கம்ப்யூட்டரில் சென்னையில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்யலாம். உங்கள் மென்பொருளை விலை கொடுத்து வாங்க தேவையில்லை. வாடகை கொடுத்தால் போதும். சீனாவில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்காவில் உட்கார்ந்த கொண்டு தமிழ்நாட்டில் ஒரு கட்டடமே கட்டலாம்.
இங்கு பல இன்ஜினியர்கள், பல கம்ப்யூட்டர் வேலை செய்பவர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம், இந்த 5G தொழில்நுட்பம் மூலம் வருங்காலத்தில் சாத்தியம் ஆகலாம்!