மதுரையை எரித்துவிட்டு அழுது கொண்டே , சித்த பிரமை பிடித்தவள் போல் கால் போன போக்கில் கண்ணகி நடக்க ஆரம்பிக்கிறாள். முடிவில், 14 நாட்களுக்குப் பிறகு, சேரநாட்டு எல்லையில் இருந்த கொடுங்காவலூர் என்ற ஊருக்கு அருகே உள்ள வண்ணாத்தி பாறையை சென்றடைகிறாள். இது, தற்போதைய தமிழக —கேரள எல்லைப் பகுதியான 'இடுக்கி' ' மாவட்டமாகும்.
அங்கு வாழும் குறவர்களிடம் தனக்கு நடந்த அநியாயத்தை கூறி கண்கலங்குகிறாள். மேலும் சில காலம் அவர்களுடன் வாழ்ந்து வருகிறாள்.மரணம் எப்போது வரும்? தன் கணவன் கோவலனை எப்போது சேருவோம் என்று சதா தன் கணவன் நினைவோடு, தன் மரணத்தை நோக்கி காத்துக் கொண்டிருந்தாள்.
ஒரு நாள் தேவலோகத்தில் இருந்து நிலவின் வழியாக கோவலன் வந்து தன் மனைவி கண்ணகியை அழைத்துச் சென்றதாக ஒரு குறிப்பு உள்ளது.
இது பற்றி தம் நாட்டின் அரசன் சேரன் செங்குட்டுவனிடம் இந்த அதிசயத்தை பற்றி மக்கள் கூறுகின்றனர். அதனை கேட்டு பரவசமடைந்த சேரன் செங்குட்டுவன் அந்த இடத்தில் கண்ணகிக்கு ஒரு கோயிலை கட்டினார் அதனுள் கோவலனும் கண்ணகியும் கடவுளராக வைத்து வணங்கப்படுகின்றனர் .
கண்ணகிக்கு அவர் ஆசைப்பட்ட வாழ்க்கை இந்த இடத்தில் கிடைத்ததால் இங்கே வேண்டிக் கொள்ளும் அனைத்தும் நிறைவேறும் என்றும் நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது .
கண்ணகி நடந்து வந்த பாதையாக கருதப்படும் ஒரு ஒற்றை அடிப்பாதை ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு இங்கே உள்ளது. இன்றும் பக்தர்கள் சின்கா பாதை வழியாக சென்று தான் கண்ணகியை தரிசிக்கின்றனர்.வருடத்திற்கு ஒருமுறை, அதாவது சித்ரா பௌர்ணமி அன்று கோவலன் கண்ணகியை தரிசிக்க மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.