தேவையற்ற கொழுப்பை குறைக்க கை மருந்து என்ன?

இதற்கு உணவே மருந்து!

முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நம் உடல் செல்கள் உற்பத்தியாவதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். உடலில் உள்ள கொழுப்பு எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். அதிகமிருந்து மற்ற இரண்டும் குறைவாக இருக்க வேண்டும்.

அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.

நாம் உண்ணும் உணவு நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். சாச்சுரேட்டட் ஃபேட் (நிறைவுற்ற கொழுப்பு) மற்றும் டிரான்ஸ் ஃபேட் (மாறுதல் அடையும் கொழுப்பு) இவை உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். தினசரி உணவில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மோனோசாச்சுரேட்டட் ஃபேட், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். இது ஆலிவ், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது. பாதாம், வால்நட்டில் உள்ள கொழுப்பும் ஆரோக்கியத்தைத் தரும். ஆளி விதை போன்ற விதைகள், வால்நட் போன்ற கொட்டைகள் சேர்த்துக் கொள்வது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். காய்கறிகள் பழங்கள் சுண்டல் வகைகள் முழு தானியங்கள் ஆகியவை உணவில் இடம் பெற வேண்டும்.

கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கக் கூடிய எண்ணெய் வகைகளை சேர்க்கவே கூடாது. கெட்ட கொழுப்பு, நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் இருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பது மட்டுமல்ல, நல்ல கொழுப்பு அளவையும் குறைக்கிறது. எனவே, உணவுப் பொருட்களை வாங்கும்போது, அதில் 'டிரான்ஸ் ஃபேட்’ என்று இருந்தால் வாங்காதீர்கள்.

அசைவம் சாப்பிடுபவர்கள் இறைச்சிக்குப் பதில் அதிக அளவில் மீன் உணவை சேர்த்துக் கொள்ளலாம்.எண்ணெய்த்தன்மை கொண்ட மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருப்பதால், இது கெட்ட கொழுப்பையும் ட்ரைகிளிசரைட்களையும் குறைக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மீன் உணவை எடுத்துக்கொள்ளலாம். எண்ணெயில் மீன் வறுப்பதை விட குழம்பு வடிவில் எண்ணெயைக் குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதால் கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

மேலும் மது, புகைப்பழக்கம் இவற்றை தவிர்க்க வேண்டும் என்பது எந்தவொரு உடல்நலக் குறிப்பிலும் வரும் ஒன்று தான்.

மேற்கூறியவற்றை பின்பற்றினால் உடலில் கொலஸ்ட்ரால் அளவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

பின் குறிப்பு: இதற்கான மாத்திரைகள் உண்டு. என் அனுபவத்தில், இவை எதிர்வினை பிரச்னைகள் (தசை வலி) ஏற்படுத்துவதால் எனக்கு ஒத்துக் கொள்வதில்லை. மாத்திரைகளை நிறுத்தி விட்டு மேற்கூறிய முறையிலேயே உணவுப் பழக்கம் கைக்கொண்ட நாள் முதல் பல வருடங்களாக கொழுப்பு அளவுகள் கட்டுப்பாட்டில் உள்ளது. (எப்போதுமே எண்ணெயில் பொரித்த உணவு எனக்கு பிடிக்காது என்பதும் உணவுக் கட்டுப்பாட்டை வெற்றியாக்கியதில் முக்கிய பங்காற்றுகிறது!)

எனவே படித்து விட்டு கடந்து போகாமல் செயலில் இறங்கினால் நல்ல தீர்வு கிடைக்கும்.

Previous Post Next Post